வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சருக்கும் டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் டின் மீன் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு டின் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள டின் மீன்களுக்கு மேலதிக வரி ஒன்றை அறவிடுவதற்கு ஏதுவான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.