மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 நலன்புரி நிலையங்களில் 353 குடும்பங்களைச் சேர்ந்த 954 பேர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற
விசேட ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், 10846 குடும்பங்களைச் சேர்ந்த 37845 மக்கள் தங்களின் வீடுகளில் உள்ள சொத்துக்கள் மற்றும் கால் நடைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அவர்களுக்கு வேண்டிய நலன்புரி திட்டங்கள் பிரதேச செயலகத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பிரதேச செயலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு 3 நாட்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதனை விட உலருணவு பொருட்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும், அரச உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை விட கொழும்பு அனர்த்த நிலையத்தின் மூலம் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு படுக்கை விரிப்பு உள்ளிட்ட நிவாரனங்கள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.
அடைமழை காரணமாக மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் புலி பாய்ந்தகல், வாகரை, கல்லறிப்பு, சித்தாண்டி, பெருமாவெளி, நாசிவன்தீவு போன்ற இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தற்காலிக போக்குவரத்து படகுச் சேவைகள் மற்றும் இயந்திர சேவைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எவ்வித தடங்களும் ஏற்படவில்லை முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் நாசிவன்தீவில் மாத்திரம் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கடற்படையின் உதவியுடன் படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்