மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் சித்தாண்டி, கிரான், வாகரை மற்றும் வாழைச்சேனை உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் பல இடங்களில் பிரதான வீதியை குறுக்கறத்து வெள்ளநீர் செல்வதால் அப்பகுதிகளின் ஊடாக போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மாவட்ட அரசாங்க அதிபரினால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மட்டக்களப்பு நாசிவன் தீவு பகுதியிலும் பிரதான வீதியை ஊடறுத்து இரண்டு அடிக்கு மேலாக வெள்ள நீர் வேகமாக கடந்து செல்வதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வேடிக்கை பார்க்க செல்வதும் ஆபத்தான முறையில் அதனை கடந்து செல்வதையும் காணக்கூடியதாக உள்ளதை நேரில் சென்று அவதானித்த அரசாங்க அதிபர் அப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.