தான் மட்டக்களப்பு சிறையில் இருந்த காலத்தில் பெரெண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனமானது சிறைச்சாலை நிர்வாகத்தினருடன் இணைந்து அங்குள்ள கைதிகளின் மனபக்குவத்திற்காகவும், பொழுது போக்கினையும் கவனத்தில் கொண்டு சிறு கைத்தொழில் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தும்புத்தடி கட்டுதல்,கயிறு திரித்தல் போன்ற பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி அதன் மூலமான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து அப்பணத்தினை சிறைச்சாலை நூலகம்,நலன்புரி விடயங்களுக்கும் பயன்படுத்தியதாக அறிகின்றேனேன வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
செவ்வாய் கிழமை 16 அன்று கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நாசீவன் தீவு கிராமத்தில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் இன்றி சிரமத்திற்கு உள்ளான 475 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்,வாழைச்சேனை பிரதேச செயலகம் என்பன பெரண்டினா நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந் நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் போதிகளை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றும் போது பெரண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனமானது கல்வி,உட்கட்டமைப்பு,விசேடதேவையுடையோர்களுக்கான உதவிகள்,வாழ்வாதார உதவிகள்,இளைஞர் யுவதிகளுக்கான வாழ்வாதார தொழில் பயிற்சிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முன்னின்று செயல்பட்டு வருகிறது என்றார்.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தினி திருச்செல்வம்,உதவிப் பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன்,பெரண்டினா நிறுவனத்தின் பிரதி பொதுமகாமையாளர் வி.எம்.ரகிம் அமைச்சரின் அபிவிருத்தி குழு செயலாளர் த.தஜிவரன்,கிராமசேவை உத்தியோகத்தர் ம.டிரோன் ஆகியோர்களும் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.