மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் ‘ஹெபடைடிஸ் பி” நோயை கட்டுப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று (17) அறிவித்துள்ளது.
இரண்டு நாடுகளும் அதிகளவான குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை மற்றும் நோயினால் குறைந்தளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்த நாட்டு மக்கள் சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில்,
மாலைதீவு மற்றும் இலங்கையின் சாதனைக்கு நான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
ஹெப்படைடிஸ் பி என்பது ஹெப்படைடிஸ் பி வைரஸால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இது கல்லீரலைப் பாதிக்கிறது மற்றும் கடுமையான அல்லது நாள்பட்ட நோயை ஏற்படுத்தலாம். குழந்தைகளிடையே நீண்டகால தொற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.