சாய்ந்தமருதின் முன்னணி விளையாட்டு கழகங்களில் ஒன்றான பிளாஸ்டர் விளையாட்டுக்கழக ஆறாவது ஆண்டை முன்னிட்டு நடைபெறவுள்ள கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் வெற்றிக்கிண்ணம் 2024 ஆண்டுக்கான அணிகள் அறிமுகமும், வெற்றிக்கிண்ண அறிமுகமும், சுற்றுத்தொடரின் போட்டி அட்டவணை வெளியீடும் கழக முகாமையாளர் எம்.எல்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழகத் தலைவர் எம்.பி.எம். பாஜில் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (20) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான எஸ்.எல். சம்சுதீன் மற்றும் சுற்றுத்தொடருக்கு பிரதான அனுசரனை வழங்கும் நாபீர் பௌண்டஷன் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எச்.எம். பாயிஸ் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், கழக ஊடக செயலாளருமான யூ.எல்.என். ஹுதா, கழக உப தலைவரும், ஓய்வு பெற்ற பிரதி அதிபருமான ஏ.எம். அப்துல் நிஸார், கழக செயலாளரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான எம்.ஏ.சி. நிஸார், கழக பொருளாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எம். முனாஸ், உட்பட கழக நிர்வாகிகள், வீரர்கள், அம்பாறை மாவட்ட 27 முன்னணி விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், நாபீர் பௌண்டஷன் உறுப்பினர்கள், நடுவர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய அணியில் கிரிக்கெட் வீரர்களாக சிறுபான்மை இன வீரர்கள் புறக்கணிக்கப்படும் விடயங்கள் தொடர்பிலும், போதைத்தடுப்பு தொடர்பிலும், போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டவர்களின் விடயங்கள் தொடர்பிலும் அதிதிகளினால் உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்த மாதம் ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள இந்த சுற்றுத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசும், கிண்ணமும் இரண்டாம் நிலை அணிக்கு 25 ஆயிர ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.