யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு காவல்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.
நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணிஅம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எந்தவொரு அனுமதியுமின்றி வைக்கப்பட்ட நாகபூசணி அம்மனின் சிலையை அகற்ற யாழ்ப்பாணம் காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.