பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் நேற்றைய தினம் 22 பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2023.11.25ம் திகதி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பினை மேற்கொண்டதன் பேரில் இவர் வெல்லாவெளி பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து நேற்றைய தினம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது நகுலேஸ் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது இன்னும் இயலாத ஒரு விடயமாகவே இருக்கின்றது.
இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் என்னைப் போன்று எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் தொடர்பிலும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குறைந்தபட்சம் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை உரியவர்கள் கையாள வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.