எந்தவொரு கூட்டணியுடனும் இணையுமாறு தமது கட்சிக்கு இதுவரையில், எவ்வித அழைப்புக்களும் வரவில்லை என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக பிரச்சினைகள் வரும்போது இது தொடர்பில் தாம் அறிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01.02.2024) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜுன், ஜுலை மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு மாவட்டதிலே அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் மாவட்டதிற்கு வந்திருக்கின்ற ஒதுக்கீடுகளில் பிரதேச மட்டத்தில் சரியாகப் பயன்படுத்துவதற்குரிய திட்டமிடல்கள் மற்றும் அதற்குரிய ஆலோசனைகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பெற்றுக் கொண்டோம்.
தற்போது மாவட்ட அபிவிருத்திகளுக்காக நிதிகள் விடுப்புச் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுமார் 300 மில்லியனை அண்மித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருடனும், பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர்களுடனும், மக்களுடனும் கலந்துரையாடி அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய அபிவிருத்திகளுக்கு நிதியை பங்கீடு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. வாக்கு வங்கியிலே தளம்பலுக்காக கூட்டணிகள் அமைக்க வேண்டிய தேவைப்பாடுகள் எமக்கு இல்லை.
அதனால் உறுதியாக நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமக்கு இதுவரைக்கும் எந்த கூட்டணியுடனும் இணையுமாறு எந்த அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை.
இவ்வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக பிரச்சினைகள் வரும்போது இது தொடர்பில் நாம் அறிவிப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.