மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஊடக தணிக்கையினை மாவட்ட அரசாங்க அதிபர் அமுல் படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஊடகவியலாளர்களுக்கு கடிதம் மூல மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் ஊடகவியலாளர்களுடன் இன்று நடைபெற்ற கூட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களின் கூட்டத்திற்கு பல ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதோடு. ஊடகவியலாளர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் செய்தி சேகரிப்பது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவற்றையெல்லாம் புறந்தள்ளி நான்கு ஊடகவியலாளர்களை அழைத்து கூட்டம் நடாத்திவிட்டு அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை அபிவிருத்தி குழு கூட்டத்தில் நடைபெறும் செய்திகளை மாவட்ட தகவல் திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுவரை இருந்த எந்த அரசாங்க அதிபரும் செய்யாத வேலையை தற்போது புதிதாக வந்த அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரச அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு வகையாக செய்திகளை வெளியிடும் நிலையில். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி தொடங்கி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் ஊழல் நடைபெற்று பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படும் நிலையில் மாவட்ட தகவல் திணைகள அதிகாரிகள் தரும் செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு உண்மைகளை வெளியிட முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நான்கு தூண்களில் நான்காவது தூணை வெட்டிவிட முயற்சிப்பது ஏன் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஊழல் அற்ற வெளிப்படைத் தன்மையுடன் ஒரு மாவட்ட நிர்வாகம் செயற்படுமாக இருந்தால் ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் கண்டு பயப்பட வேண்டிய தேவை இருக்காது.
ஊடாக சுதந்திரத்தையும், தகவல் அறியும் சுதந்திரத்தையும் மீறி தாங்கள் தரும் செய்தியை தான் ஊடகவியலாளர்கள் போடவேண்டும் என்பது ஊடகத் தணிக்கைக்கு சமமான செயற்படாகும். இது ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை சட்டங்களை மீறுவதாக அமைகிறது?
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடக தணிக்கை நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது?