நாங்கள் தெருவிலே நிற்கின்ற அம்மாக்கள் அல்ல. எங்களுடைய குடும்பம், எங்கள் பிள்ளைகள், எங்களுடைய பண்பாடு, கலாசாரம் என்று வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். போராலே எங்கள் பிள்ளைகளை காணாமல் போக செய்த படியால்தான் தெருவிலே நின்று நீதி கேட்டு நிற்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சென்ற நான்காம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து சென்ற அந்த போராட்டத்தினை பல இடையூறுகள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரினாலும் ஏனைய தரப்பினரினாலும், இராணுவப்படைகளாலும் எங்களுடைய பிள்ளைகள் இழுத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சிறையிலே வைக்கப்பட்டிருந்தார்கள். இவை எல்லாம் இலங்கை அரசின் அடாவடித்தனம். நாங்கள் ஜனநாயக ரீதியிலே போராடி இருக்கின்றோம். எங்களுக்கு உரியதை பெறுவதற்காக நீதி கேட்டு நிற்கின்றோம் . எனக்கு கூட நீதிமன்றத்தில் இருந்து கட்டளை வந்திருக்கிறது. அந்த நிகழ்வுக்கு போககூடாது என்று, இந்த கட்டளை எனக்கு மட்டுமல்ல கிளிநொச்சி மாவட்ட தலைவிக்கும் மற்றும் வேறு பலருக்கும் குறித்த அச்சுறுத்தல் கட்டளை வந்துள்ளது.
உண்மையாகவே நீதிமன்ற கட்டளைகளை நாங்கள் மதிக்கின்றோம். நீதியை மதிக்கின்றோம். நீதி கிடைக்காத போதுதான் நாங்கள் தெருவிலே நிற்கின்றோம். இந்த மேன்மை தாக்கு நீதியாளர் கூட இந்த தடை உத்தரவை கையொப்பமிட்டு அனுப்பும் பொழுது யோசிக்க வேண்டும்.
இந்த தாய்மார்களுடைய கண்ணீர் எதற்காக அவர்கள் தெருவிலே நிற்கின்றார்கள் என்று, நாங்கள் தெருவிலே நிற்கின்ற அம்மாக்கள் அல்ல. எங்களுடைய குடும்பம், எங்கள் பிள்ளைகள், எங்களுடைய பண்பாடு, கலாசாரம் என்று வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். போராலே எங்கள் பிள்ளைகளை காணாமல் போக செய்த படியால் தான் தெருவிலே நின்று நீதி கேட்டு நிற்கின்றோம். எதுவித தடைகள் வந்தாலும் எங்களுடைய நீதிகேட்கும் பயணத்தை தொடர்வோம் என்பதை இந்த ஊடக வாயிலாக அனைவருக்கும் தெரிக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.