இணையத்தில் பரவிவரும் போலி கொரிய மொழி விண்ணப்பப் படிவத்தை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பப் படிவம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், தகவலின் விளக்கம் மட்டுமே உள்ளது என்றும் பணியகம் வலியுறுத்துகிறது.
2024ஆம் ஆண்டு கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பப் படிவம் தற்போது இணையத்தில் பரவி வருவதாகவும், கொரிய மொழிப் பரீட்சைக்கும் தொடர்பில்லாத ஒரு போலி விண்ணப்பப் படிவமே இவ்வாறு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பரீட்சை விண்ணப்பம் முற்றிலும் போலியானது என்பதை கொரிய HRDK நிறுவனமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த போலியான கூகுள் படிவங்களுக்கு தமது தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை2024 கொரியப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கொரிய EPS பரீட்சை வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மாத்திரம் அங்கு பதிவிடப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவம் www.slbfe.lk இல் பெப்ரவரி 26 முதல் 29 வரை வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு 1989 என்ற எண்ணை அழைக்குமாறு பணியகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.