மட்டக்களப்பு செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் நோய் தொற்றை உண்டாக்க கூடியவாறு உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று (22.02.2024) தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்து தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் உத்தரவிட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை அழிக்குமாறு நீதிமன்றினால் கட்டளையிடப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-587-edited.png)
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தலைமையில், ஏறாவூர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவு பொறுப்பாளர் அமுதமாலன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் திருனவன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான தீபகுமாரன், கிஷான், சிவகாந்தன், ரவிதர்மா ஆகியோர் இணைந்து நேற்று (22) உணவகங்களை முற்றுகையிட்டு திடீர் பரிசோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-23-at-15.32.00_d671924d-edited.jpg)
இதன் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் நோய்த்தொற்றை உண்டாக்க கூடியவாறு உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த உணவக உரிமையாளர்களிடம் இருந்து பெரும் தொகையிலான உணவுகள் கைப்பற்றப்பட்டதுடன் நால்வருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-588-edited.png)
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் உணவக உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்து தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை அழிக்குமாறு கட்டளையிட்டார்.
இதேவேளை இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் மேலும் கண்டுபிடிக்கப்பட்ட சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து வந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தெரிவித்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-589.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-23-at-15.31.26_2996ed40-edited.jpg)