அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப்வண்டி மற்றும் புடவைக்கடை ஒன்றுக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணு வீரர் மற்றும் அவரது நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (24.04.2023) முன்னெடுக்கப்பட்டதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ஜீப் வண்டியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தம்பிலுவில் பிரதான வீதியில் அமைந்துள்ள புடவை கடை கட்டிடத் தொகுதி ஒன்று கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்று முழுதாக சாம்பலாகியுள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் நேற்றைய தினம் (24.04.2023) திருக்கோவில் 3ஆம் பிரிவைச் சேர்ந்த 21 வயதுடைய இராணுவத்தில் கடமையாற்றி, தலைமறைவாகி வந்த இராணுவ இராணு வீரரையும் திருக்கோவில் முதலாம் பிரிவைச் சோந்த அவரது 20 வயதுடைய நண்பரையும் அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர், புடவைக்கிடையில் கடமையாற்றி வந்த நிலையில், அங்கிருந்து புடவைகளைத் திருடிச் சென்ற சம்பவங்கள் காரணமாக அவருக்கான சம்பளத்தை வழங்காது அவரை கடை முதலாளி வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக முதலாளியிடம் சம்பளம் கேட்டு முரண்பட்ட முன்னாள் இராணு வீரர், குறித்த கடை தொகுதிக்கு மார்ச் மாதம் 23ஆம் திகதி அவரது 20 வயதுடைய நண்பனுடன் சேர்ந்து பெட்ரோலினை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அவ்வாறே கடந்த காலத்தில் ஒரு சம்பவத்தில் தன் மீது பொலிஸார், பொய் குற்றம் சுமத்தி கைது செய்தமைக்கு பழிவாங்குவதற்காக, பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ஜீப் வண்டிக்கு தீ வைத்து விட்டுத் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.