பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் 58 விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணியை, உயர் செயல்திறன் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பரிந்துரைத்துள்ளார்.
பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
அத்துடன், ஒகஸ்ட் டமாதம்28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒலிம்பிக் போட்டிக்கு 11 வெவ்வேறு விளையாட்டுத் துறைகளில் மொத்தம் 33 வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இதன்படி, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 வீர வீராங்கனைகள் 8 வெவ்வேறு விளையாட்டுத் துறைகளில் பங்கேற்கத் தயாராகி வருவதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பணிப்பாளர் நாயகம் ஷேமல் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், 33 தடகள வீரர்களில் 19 பேர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் கௌரவத்திற்காக போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களை, உயர் செயல்திறன் குழுவிற்கு ஹரின் பெர்னாண்டோ பரிந்துரைத்துள்ளார்.
இந்த நடவடிக்கை ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதான மாதாந்த கொடுப்பனவைத் தவிர, இலங்கையின் உயர் செயல்திறன் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிதியையும் பெற வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரா ஒலிம்பிக் வரலாற்றில், இலங்கை ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
தினேஷ் பிரியந்த கடந்த 2020 ஆம் ஆண்டில் தங்கப் பதக்கத்தையும், 2016 இல் வெண்கலப் பதக்கத்தையும், பிரதீப் சஞ்சய 2012 இல் வெண்கலப் பதக்கத்தையும், துலான் கொடிதுவாக்கு 2020 இல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.