கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைதான நபர் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர், கடந்த 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி பகுதி பகுதியாக ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் கிடைத்த முறைப்பாடை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது, இதனை அறிந்த சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில், அவர் வெளிநாடொன்றுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சொகுசு பேருந்தில் பயணிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து செம்மணி பகுதியில் பேருந்தினை மறித்து சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.