இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற நான்கு பெண்கள் ரியாத்தில் உள்ள வீடொன்றில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தல், தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் மறைத்து வைத்திருந்த தொலைபேசி ஊடாக தாம் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்த தகவல்களை இலங்கை ஊடகங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் குருநாகல் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் இருந்து இந்த பெண்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரியான உணவு இன்மை, சம்பளம் வழங்காமை, பல்வேறு தொல்லைகளால் வேலை இழப்பு என பல காரணங்களால் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இந்த பெண்கள் வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பெருமளவிலான வீட்டுப் பணியாளர்களும் இந்த இடத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்த இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள், தங்களை அவ்விடத்திலிருந்து மீட்டுத் தருமாறும் கோரிக்கை. விடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் தாங்கள் வெளிநாடு சென்றதாகவும், தனியார் தொழில் நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து எவ்வளவு தெரிவித்தும் பலனில்லை எனவும், அவர்களை காப்பாற்ற இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதே இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.