கொழும்பு மற்றும் நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் தொழிலாசைக்காட்டி ரஷ்ய போருக்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இவர்கள் ரஷ்ய இராணுவத்திற்கும் மற்றும் சிவில் வேலைகளுக்காகவும் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த நிலையில் நேற்று(03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இவர்களில் இரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் மற்றும் இலங்கையில் இராணுவ சேவையிலிருந்து விலகியவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
ரஷ்யாவிற்கு போருக்காக அனுப்பப்படுவது தெரிந்த இவர்கள் ரஷ்ய பயணத்தின் அனுபவத்தை ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் இந்த பயணத்திற்காக சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த பணத்தை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து திரும்பப்பெற உள்ளதாகவும் பணத்தைத் திரும்பப்பெறுவதில் பாதிப்பு ஏற்படலாமென்ற அச்சத்தில் விமான நிலையத்தை விட்டு விரைவாக வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தப்பியோடியவர்கள் கம்பஹா, கண்டி, கம்பளை, ருவன்வெல்ல, காலி, மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.