நாடளாவிய ரீதியிலுள்ள பெண்களின் உடல் மற்றும் உளவியல் சுகாதாரத்தில் ‘மாதவிடாய் வறுமை’ நிலை மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை குடும்பத்திட்ட சங்கம், சனிட்டரி நப்கின்கள் உள்ளடங்கலாக மாதவிடாய்கால உபயோகப்பொருட்கள் அனைத்துக்குமான வரிகளை முற்றாக நீக்கவேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தினால் கடந்த வாரம் ‘Axe the Period Tax’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியிலுள்ள பெண்களின் மாதவிடாய்கால சுகாதார நலனை உறுதிப்படுத்தும் வகையில் சனிட்டரி நப்கின்கள் உள்ளடங்கலாக மாதவிடாய்கால உபயோகப்பொருட்களுக்குரிய அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான கொள்கை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.
சர்வதேச ரீதியில் ‘Period Poverty’ (மாதவிடாய் வறுமை) எனும் சொற்பதமானது பெண்கள் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு அவசியமான சுகாதாரமானதும், தரமானதுமான சனிட்டரி நப்கின்கள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் இருப்பதைக் குறிக்கின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இந்நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்ற போதிலும், கொள்கைசார் கலந்துரையாடல்களின்போது இவ்விடயம் பெரும்பாலும் கவனத்திற்கொள்ளப்படுவதில்லை என இலங்கை குடும்பத்திட்ட சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் ‘மாதவிடாய் வறுமை’ நிலை 50 சதவீதமாகக் காணப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் பெண்கள் உள்ளடங்கும் 50 சதவீதமான குடும்பங்களில் சனிட்டரி நப்கின்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பணம் செலவிடப்படுவதில்லை எனவும், அண்மைய பொருளாதார நெருக்கடியின் பின்னர் இவ்வீதம் மேலும் அதிகரித்திருக்கக்கூடும் எனவும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு 140.6 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 10 சனிட்டரி நப்கின்களைக்கொண்ட பொதி, இப்போது 270 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதன்படி விலையில் 92 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சனிட்டரி நப்கின் உள்ளிட்ட மாதவிடாய்கால உபயோகப்பொருட்களுக்கான வரி அறவீட்டின் மூலம் வெறுமனே 0.0002 சதவீத வருமானமே திரட்டப்படுவதாகவும், எனவே அவற்றுக்கான வரிகளை முற்றாக நீக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார். அத்தோடு பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின்களை இலவசமாக வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்தார்.