Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

1 year ago
in அரசியல், சிறப்பு கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் ‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை அகற்றுவதற்கான சதி’ (The conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் நூலை வெளியிட்டிருக்கிறார்.

வழமையாக அரசியல் தலைவர்கள் செய்வது போன்று மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து பெரும் ஆரவாரத்துடன் நூல் வெளியீட்டு வைபவம் ஒன்றை நடத்துவதை தவிர்த்து கோட்டாபய நேரடியாகவே முக்கியமான புத்ததக விற்பனை நிலையங்களுக்கு நூலின் பிரதிகளை அனுப்பிவிட்டார்.

நூல் வெளியீடு குறித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை மாத்திரம் அவர் வெளியிட்டார்.

கோட்டாபயவின் நூல் வெளியான கையோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பற்றி ஒரு நூலை விரைவில் வெளியிட விருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அறிவித்திருக்கிறார்.

பாராளுமன்றத்தில் தனது கட்சியின் சார்பில் ஒரேயொரு உறுப்பினராக இருந்த விக்கிரமசிங்க 2022 அரகலய மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு எவ்வாறு நாட்டின் அரச தலைவராக வந்தார் என்பதை அந்த நூல் விளக்கும் என்று அவர் கூறுகிறார்.

மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் இருந்து பதவியைத் துறந்த ஜனாதிபதியின் கதையை வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த சில தினங்களில் அல்லது வாரங்களில் அவரின் எஞ்சிய பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக பதவியேற்றவரின் கதையையும் வாசிக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவிருக்கிறது.

கோட்டாபயவின் நூலுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்தன.

ஆனால், இலங்கையில் மக்கள் மத்தியில் நூல் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. ஏற்கெனவே பொதுவெளியில் அறியப்பட்ட விடயங்களே நூலில் பெரும்பாலும் அடங்கியிருக்கின்றன.

இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் மக்கள் கிளர்ச்சியின் விளைவாக இடைநடுவில் பதவியை விட்டு ஓடிய கோட்டாபய தனது நூலுக்கு வேறு பெயரைக் கொடுத்திருந்தால் சிலவேளை அது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும்.

தங்களுக்கு எதிரான சதிமுயற்சிகள் குறித்து ராஜபக்சாக்கள் பேசுவது வழமையான விடயம். சதிக்கோட்பாடுகளை புனைவது ராஜபக்சாக்களுக்கு கைவந்த கலை.

இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையில் இரு வருடங்களுக்கு முன்னர் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய மக்கள் கிளர்ச்சியை உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகளின் சதி என்று ராஜபக்சாக்கள் கூறிவருகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்கு காரணமான தங்களது தவறான ஆட்சிமுறைக்கு எதிராகவே மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள் என்பதை ராஜபக்சாக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.

ராஜபக்சாக்களின் அதிவிசுவாசியாக இருந்து பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு எதிராக திரும்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச 2022 மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டுச்சதி இருந்ததாக குற்றஞ்சாட்டி ஏற்கெனவே கடந்த வருடம் ‘ ஒன்பது; மறைக்கப்பட்ட கதைகள்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். அவரின் அந்த நூலில் இருந்த அளவுக்கு கோட்டாபயவின் நூலில் புதிதாக விடயங்கள் எதுவும் இல்லை என்று சில அவதானிகள் கூறுகிறார்கள்.

தேசிய தேர்தல்களை நாடு எதிர்நோக்கவிருக்கும் நிலையில், நீண்டகால மௌனத்தைக் கலைத்து கோட்டாபய தனது நூலை தற்போது வெளியிட்டிருப்பது மீண்டும் அரசியலில் இறங்குவதற்கான அறிகுறி என்றும் ஊகிக்கப்படுகிறது.

அதேவேளை, சகோதரர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பிய தருணத்தில் கோட்டாபயவின் நூல் வெளிவந்திருப்பதை தற்செயலான நிகழ்வு அல்ல என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

சர்வதேச சக்திகளின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் விளைவாகவே பதவியில் இருந்து இறங்கவேண்டிவந்தது என்று கோட்டாபய நூலில் கூறுகிறார்.

ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றிய தனிப்பட்டதும் நேரடியானதுமான அனுபவமே இந்த நூல் என்று கூறும் அவர் எந்த நாட்டினதும் பெயரைக் குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறார். சதிக்கான சான்று எதையும் கூட அவர் முன்வைக்கவில்லை.

சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியே தனது வீழ்ச்சிக்கு பொறுப்பு என்பது அவரின் நிலைப்பாடு.

2006ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் இலங்கையில் புவிசார் அரசியல் போட்டி அம்சம் ஒன்றைக் கொண்டு வந்ததன் விளைவே தனது அரசியல் வீழ்ச்சி என்பது அவரது வாதம்.

வெளிநாட்டுச்சதி இருக்கவில்லை என்று எவராவது கூறுவார்களேயானால், அவர்கள் பத்தாம் பசலிகளாகவே இருக்க முடியும் என்று கூறும் முன்னாள் ஜனாதிபதி, விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் தாங்கள் வெற்றிபெற்ற நாளில் இருந்தே இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடு தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவான நேரம் தொடக்கம் என்னை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்குடன் உள்நாட்டு,வெளிநாட்டுச் சக்திகள் செயற்படத் தொடங்கிவிட்டன.

“நான் பதவியேற்ற உடனடியாகவே இலங்கையிலும் உலகம் முழுவதும் கொவிட் -19 பெருந்தொற்று பரவத் தொடங்கிவிட்டது.

அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் எனது இரண்டரை வருட பதவிக்காலத்தையும் செலவிடவேண்டியிருந்தது. தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக பெருந்தொற்று 2022 மார்ச் மாதமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பொருளாதாரம் மீட்சிபெறத்தொடங்கியதும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சதிகாரச் சக்திகள் தொடங்கிவிட்டன.

“இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடும் உள்நாட்டு அரசியல் வெளிச்சக்திகளினால் சூழ்ச்சித்தனமாகக் கையாளப்படும் போக்கும் கசப்பான உண்மையாகிவிட்டது.

இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான அறுபது வருடங்களில் இத்தகைய ஒரு நிலை இருக்கவில்லை. என்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சுதந்திரம் பெற்ற பிறகு தேர்தல்கள் மூலமாக அமைதியான முறையில் ஆட்சிமாற்றத்தைக் கண்டுவந்த இலங்கையின் அரசியலில் புதிய ஒரு போக்கைக் கொண்டுவந்துவிட்டன” என்று கோட்டாபய தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தனது நூல் இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல வெளிநாட்டவர்களுக்கும் அக்கறைக்குரியதாக இருக்கும் என்று கூறியிருக்கும் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது பாதுகாப்புத்துறை கட்டமைப்புக்களை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததைப் போன்று ஜனாதிபதியாக வந்த பிறகு செய்யமுடியவில்லை என்றும் தனது குடும்பத்தவர்களை அரசாங்கத்தில் உயர்பதவிகளில் நியமிக்கும் விடயத்தில் திரிசங்கு நிலைக்குள்ளானதாகவும் கூறியிருக்கிறார்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்காத காரணத்தால் பெருமளவு அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை என்று கூறியிருக்கும் அவர் முன்னைய ஜனாதிபதிகள் சகலருமே தங்களது கட்சிகளின் தலைவர்களாகவும் தாங்கள் இருப்பதை உறுதிசெய்துகொண்ட அனுபவத்தை முன்கூட்டியே ஏன் கவனிக்கத் தவறினார் என்று தெரியவில்லை. அரசியல் அதிகாரம் இரத்த உறவையும் தாண்டியது என்பதை பாவம் கோட்டாபய புரிந்துகொள்ளவில்லை.

அரகலய மக்கள் கிளர்ச்சி குறித்து அவர் நூலில் எழுதிய முக்கியமான பகுதிகள் குறித்து அவதானங்களை சிலவற்றை முன்வைப்பதே இன்று இந்த பத்தியின் பிரதான நோக்கமாகும். தனது ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிக்கு அவர் முற்றுமுழுதாக இனவாத அடிப்படையிலான அரசியல் காரணத்தைக் கற்பிப்பதற்கு இந்த நூலை எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

தொடர்ந்தும் தான் பதவியில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு பாகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே அறகலயவுடன் தொடர்புடைய சகல போராட்டங்களும் முன்னெடு்கப்பட்டதாக கோட்டாபய கூறுகிறார்.

அரகலய அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு விரோதமானதாக அமைந்திருந்தாகவும் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவைக் கொண்டிருந்ததாகவும் அவர் எழுதியிருக்கிறார்.

கொழும்பு காலிமுகத்திடல் அரகலயவில் கூடி நின்றவர்கள் யார் என்பதை எவரும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் சகலரும் ஏற்கெனவே தனக்கு எதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறியிருக்கும் அவர் ஒருபுறத்தில் சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் மறுபுறத்தில் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாதவர்களின் நலன்களுக்கும் இடையிலான ஒரு போட்டியின் விளைவாகவே ஜனாதிபதியாக தான் தெரிவுசெய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

“தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நான் எதிரானவன் என்ற எண்ணம் வலுவடைந்திருந்தது. கத்தோலிக்க திருச்சபையுடன் நான் உன்னதமான உறவைப் பேணிவந்தபோதிலும், அவர்களும் பிறகு எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.

அரகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன. பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகளை தணிப்பதுதான் அரகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே. ஒற்றையாட்சி அரசுக்கு பதிலாக ஐக்கிய இலங்கைக்கு கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலை அறகலயவில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டி நின்றவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது” என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த சில உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று கடந்த வருடம் நவம்பரில் உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கூறியபோதிலும், அந்த நெருக்கடிக்கு தனது அரசாங்கம் பொறுப்பு என்பதை கோட்டாபய ஒத்துக்கொள்ளவேயில்லை. தன்னை ஒரு பாதிக்கப்பட்ட ஆளாகக் காட்சிப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார்.

கோட்டாபயவின் விளக்கம் மீண்டும் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலைச் செய்வதன் மூலம் மாத்திரமே தங்களால் மீண்டும் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற ராஜபக்சாக்களின் உறுதியான தீர்மானத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாகும். தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை அவர்கள் மிகவும் சுலபமாக வெளிநாட்டுச்சதி என்று கூறிவிடுவார்கள்.

அரகலய போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் தெளிவானது. அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டு முழு உலகினதும் கவனத்தை இலங்கையை நோக்கித் திருப்பிய அந்த போராட்டத்தில் அரசியல் புரட்சி ஒன்றுக்கான பல பரிமாணங்களைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், பரந்தளவிலான வெகுஜனப் போராட்டமாக அரகலய மாறியதும் பல்வேறு அரசியல் சக்திகள் அதற்குள் ஊடுருவி வன்முறை வழியில் திசைதிருப்பியதே அதற்கு எதிரான அடக்குமுறையை அரசியல் அதிகார வர்க்கம் நியாயப்படுத்துவதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது.

தெளிவான அரசியல் கோட்பாட்டின் வழிகாட்டலுடன் கூடிய குறிக்கோளும் முறையான தலைமைத்துவமும் இல்லாத மக்கள் போராட்டங்களுக்கு நேரக்கூடிய கதிக்கு மிகவும் அண்மைக்கால உதாரணமாக அறகலய அமைந்தது.

சிங்கள மக்கள் தங்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக கிளர்ந்தெழுவார்கள் என்று ராஜபக்சாக்கள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவிற்கு கொண்டு வந்ததற்காக சிங்கள சமுதாயம் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமைத்தனமான விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கையின் ஆட்சியதிகாரம் தங்களது ஏகபோக உரித்து என்றும் ஒரு எண்ணத்தை ராஜபக்சாக்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

தங்களது செயற்பாடுகளை விமர்சனமின்றி சிங்களவர்கள் ஆதரிக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒன்றில் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் அல்லது கடந்தகால தவறுகளுக்காக தங்களை பொறுப்புக்கூற வைக்காத ஒருவர் அதிகாரத்துக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த நோக்கத்தில் தான் அவர்களின் வியூகங்கள் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

வெளிநாட்டுச்சதி என்ற பிரசாரத்தையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அரசியலையும் தவிர மீண்டுவருவதற்கு ராஜபக்சாக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. மக்கள் கிளர்ச்சியை சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கோட்டாபயவின் கருத்து அந்த சமூகத்தின் விவேகத்தை நிந்தனை செய்வதாக அமைந்திருக்கிறது.

மீண்டும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் சிங்கள மக்களிடம் பெருமளவில் எடுபடுமா இல்லையா என்பதை அடுத்த தேர்தல் ஒன்றின் மூலமாக மாத்திரமே அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஊழல் முறைகேடுகளையும் தவறான ஆட்சியையும் மூடிமறைப்பதற்கு இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலுக்கு இடமளித்தால் இலங்கைக்கு எதிர்காலமேயில்லை.

வீரகத்தி தனபாலசிங்கம்

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்
செய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்

May 24, 2025
இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்

May 24, 2025
நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க
செய்திகள்

நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க

May 24, 2025
Next Post
காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.