நாட்டில் மூன்று வகையான டெங்கு வைரஸ் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே ஒருவருக்கு இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின்படி, டெங்கு 3 வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இப்போது அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி, அதாவது ஆன்டிபாடிகள் இல்லை.நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே காய்ச்சல் வந்தால், இரண்டாவது நாளில் கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டெங்கு நோயாளிகள் மருத்துவமனைக்கு தாமதமாக வரும் பட்சத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்து தெரிவிக்கையில்,
டெங்கு நோயை கட்டுப்படுத்த தொழில்நுட்பத் தரவுகளைப் பயன்படுத்தி, நுளம்பை கட்டுப்படுத்த சிலர் முன்வரவில்லை. வீடுகளுக்குச் சென்று வீடுகளைப் பரிசோதித்து நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு வழக்கு பதிவு செய்து வருகின்றோம்.
கடந்த மூன்றரை மாதங்களில், இலங்கையில் 29,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுமார் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டுகளின் தரவுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் கடுமையான பிரச்சினையாகும். இந்த இரண்டு நோய்களும் 2023 இன் முதல் மூன்று மாதங்களில் வேகமாக அதிகரித்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.