மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதியது.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி நேற்றிரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதின.
‘டாஸ்’ வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் களமிறங்கிய டெல்லி அணி 18.3 ஓவர்கள் முடிவில் 113 ரன்னில் எடுத்தன. நடப்பு தொடரில் டெல்லி அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.
இதையடுத்து 114 ரன்கள் இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும், சோபி டேவினும் களமிறங்கினர் ஆட்டத்தின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதை தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. டெல்லி அணிக்கு எதிராக 5-வது முறையாக மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் வெற்றி இது.
கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடரில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்ட விராட் கோலி தனது வாழ்த்தை அவர்களுக்கு தெரிவித்தார்.