யாழ்ப்பாணம் – வலிகாமம், வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக யாழ்.தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் நிவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குறித்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணி சுகாஸை போராட்ட பகுதிக்குள் நுழையவிடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்து வருகின்றமையினால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியுள்ளதுடன் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.