நாட்டு மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக வீரத்துடனும், விவேகத்துடனும் செயற்பட்டு 160 வருட பொலிஸ் வரலாற்றில் தங்கள் உயிர்களை நீத்த பொலிஸ் வீரர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும்.
‘தர்மமாக செயற்படுபவன் தர்மத்தினால் காப்பாற்றப்படுவான்’ எனும் தொனிப்பொருளில் கீழ் இயங்கும் பொலிஸ் சேவையானது நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அர்பணித்து அன்றும் இன்றும் தன் உயிரை தியாகம் செய்த வீரர்களின் ஞாபகார்த்த தினமான வியாழக்கிழமை (21) நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் காலை 8 மணிக்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1864 ஆம் ஆண்டு மாவனெல்ல, உதுவன்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பொதுமக்களின் ஜனநாயக உரிமை, பாதுகாப்பு ,வன்முறை தடுப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது உயிர்களை அர்பணித்துள்ளனர் என்பதுடன் தமது குடும்ப உறுப்பினர்களின் உயிர்களையும் அர்பணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு கடமையின் போது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் படை தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.