அம்பலாங்கொடை பிரதேசத்தில் இரு இளைஞர்களைச் சுட்டுக் கொன்று மேலும் இருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் இப்பலோகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இப்பலோகம பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார்.
40,000 ரூபா பணம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“கரந்தெனிய சுத்தா” என்றழைக்கப்படும் பாதாள உலக குழுவின் தலைவரின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களுக்கும் “கரந்தெனிய சுத்தா” வுக்கும் இடையில் உள்ள தகராறே இதற்குக் காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.