புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் நேற்று (30) இரண்டாவது தடவையாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.
காலை உணவகங்களை பார்வையிட்ட அவர் உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் இன்று (30) மாலை இரண்டாவது தடவையாக திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் அழிக்கப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.