அதிக மது அருந்தியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியின் போது அதிக மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்ப்ரோ பிரிவில் வசிக்கும் கணேசன் ராமச்சந்திரன் என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.
கடந்த 27ம் திகதி எஸ்டேட்டில் உள்ள இந்து கோவிலில் வருடாந்த தேர் திருவிழா இடம்பெற்றதுடன், இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழுவினர் அதிகளவு மது அருந்துபவர்களை தெரிவு செய்யும் போட்டியை நடத்தினர்.
ஒரே தோட்டத்தில் வசிக்கும் மூன்று பேர் கலந்து கொண்ட இப்போட்டியில், மூன்று 750 மில்லி மது போத்தல்கள் வழங்கப்பட்டு, குறைந்த நேரத்தில் குடிப்பவரை வெற்றியாளராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னரும் தாங்கள் அதிகமாக மது அருந்தியிருந்ததாக அந்த தோட்டத்தின் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இரவு வீட்டுக்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கியவர், அதிகாலை (28) தூக்கத்திலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொண்ட மற்றுமொருவர் மிகவும் சுகவீனமடைந்த நிலையில் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் போது, நிமோனியா காய்ச்சல் மற்றும் கழுத்து நரம்பில் உணவு அடைப்பு ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலின் பல பாகங்கள் அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்தவரின் இறுதிச் சடங்குகள் இன்று (31) குறித்த தோட்டத்தில் நடைபெற்றது.