இலங்கை (Sri Lanka) இன்னும் அதிகரித்த வறுமை நிலைகள், வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்று உலக வங்கியின் (World Bank) அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டில் 2.2வீத மிதமான வளர்ச்சியைக் காணும் என்றும் ஸ்திரத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதோடு புதிய நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் பின்னணியில் சுற்றுலாத்துறை உட்பட்ட துறைகளில் இருந்து அதிக வருவாய்கள் கிடைத்து வருகின்றன.
எனினும், வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன
2023இல் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்துள்ளனர். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூடல். குடும்பங்கள் அதிக செலவுகள், வருமான இழப்புகள் மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் பலவிதமான அழுத்தங்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.
இது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவீனங்களைப் பராமரிப்பதற்கும் குடும்பங்கள் கடன்களை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.
ஆனால், வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் பாதையின் தொடர்ச்சியுடன் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என்று இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் ஃபரிஸ் ஹடாட் செர்வோஸ் (Faris Hadad-Zervos) வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் உறுதியான வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும் பொது முதலீடுகளுக்கான பல்வேறு கொள்கைகளை உலக வங்கியின் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.