மூன்றரை மாதக் குழந்தைக்கு அருகில் ஒரு கோப்பையில் தாய்ப்பாலை வைத்து விட்டு, இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறிய தாயொருவர் கைது செய்யப்பட்டு ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குழந்தையை தாயிடம் ஒப்படைக்குமாறும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் புலத்கொஹீபிட்டிய பொலிஸாருக்கு நீதவான் காஞ்சனா பெரேரா நேற்று (03) உத்தரவிட்டார்.
புலத்கொஹீபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்
புலத்கொஹீபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில், அந்த யுவதியுடன் அறிமுகமாகி காதல் வசப்பட்டு யுவதியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
அவர் கர்ப்பமடைந்ததும், இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் பெற்றோருக்கோ அல்லது கிராமத்தின் குடும்ப சுகாதார உத்தியோகத்தரிடமோ அல்லது புலத்கொஹீபிட்டிய பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் கருவுற்றதன் பின்னர் எவ்வித வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாத நிலையில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 27.2023 அன்று ஆரோக்கியமான குழந்தையைப் அவர் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவர் தாயையும், குழந்தையையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர்களது பெற்றோர் தலையிட்டு தம்பதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பெப்ரவரி 25, 2024 அன்று, அதிகாலை மூன்று மணியளவில், குழந்தைக்கு அருகில் ஒரு கோப்பையில் தாய்ப்பாலை வைத்துவிட்டு இந்த பெண் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறினார். மனைவி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக குழந்தையின் தந்தையான அவரது கணவர் புலத்கொஹீபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களைத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை . சுமார் ஒரு மாதத்தின் பின்னர் குறித்த பெண் தனது கணவரின் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி தான் மாவனெல்ல ஹெம்மாதகம வீதியில் பரணகம பிரதேசத்தில் இருப்பதாக தெரிவித்தார். பின்னர், அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வர அவரது கணவர் பல முறை முயன்றார், ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது. பின்னர் நேற்று முன்தினம் (02) முச்சக்கரவண்டியில் மாவனெல்ல ஹெம்மாதகம வீதியில் பரணகம பகுதிக்கு சென்ற கணவர் ஆளில்லாத வீட்டில் மனைவியை கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் . வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் குழந்தையை வளர்க்க முடியாது என்றும் அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
வீட்டுக்கு செல்ல முடியாவிட்டால் தோழியின் வீட்டுக்கு செல்லலாம் என கூறி, முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற கணவன், பெண்ணை புலத்கொஹுபிட்டிய பொலிஸாரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் பண்டாரகே சஞ்சயிடம் நேற்று (03) புலத்கொஹுபிட்டிய பொலிஸாரால் சிசு கையளிக்கப்பட்டது.
தாயார் நேற்று (03) ருவன்வெல்ல நீதவான் திருமதி காஞ்சனா பெரேராவிடம் ஆஜர்படுத்தப்பட்டார். குழந்தையை பெற்று வளர்க்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், சிசுவை துன்புறுத்தாமல் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த புலத்கொஹுபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.