ஆசிரியரொருவர் மாணவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி ஏனைய மாணவர்களும் பாதிப்பையும் அவமானத்தையும் சந்திக்கும் வகையில் சிலர் முகநூல்களில் செயற்பட்டு வருகின்றமை வேதனை அளிப்பதாக சுந்தரபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
அண்மையில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையின் காரணமாக அம் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த கிராம மக்கள் ஒன்றிணைந்து இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
பாடசாலையில் நடைபெற்ற சம்பவமானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவே காணப்படுகிறது. எனினும் நாம் எவருக்கும் பக்கச் சார்பின்றி செயற்படுபவர்கள் என்ற ரீதியில் குறித்த சம்பவத்தில் யார் சரி யார் பிழை என்பதற்கு அப்பால் அங்கு கற்று வரும் ஏனைய மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படுகின்றனர்.
அவர்கள் எமது கிராமத்தில் வசிக்காதவர்களாக உள்ளனர்.
இந்தப் பாடசாலை வலய மட்டத்தில் இரண்டாம் தரத்தில் உள்ள பாடசாலையாக காணப்படுகிறது. விளையாட்டுத்துறையாக இருந்தாலும் சரி கல்வியிலும் முன்னேற்றம் அடைந்த பாடசாலையாக விளங்கி வருகின்றது.
இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழுகின்ற இந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட பாடசாலை பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு முன்னணி பாடசாலையாக மாற்றம் பெற்று இருக்கிறது.
சிலர் இவ்வாறான வெற்றிகளை வெளிப்படுத்துவதை விடுத்து எங்கே தவறு நடக்கிறது என்பதை பார்த்து அதனை சரியாக ஆராயாமல் பாடசாலையையும் கிராமத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செயல்படுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை கிராம மக்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே முகப்புத்தகங்களிலும் சில இணையதளங்களிலும் தமக்கு வேண்டிய வகையில் எழுதிவிட்டு செல்பவர்கள் அங்கு கற்கும் ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.