ஹைதராபாத்தில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்ற கொல்கத்தாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 160 பாக்கெட் கஞ்சா சாக்லேட்டுக்களை சைபராபாத் சிறப்பு நடவடிக்கைக்குழு பறிமுதல் செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக சைபராபாத் சிறப்பு நடவடிக்கைக்குழு (எஸ்.ஓடி) அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஜகத்கிரிகுட்டாவில் உள்ள மளிகைக் கடையை அவர்கள் இன்று சோதனையிட்டனர். அந்த கடையில் 160 பாக்கெட் கஞ்சா கலந்த சாக்லேட் இருந்தது தெரிய வந்தது.
ஒவ்வொரு சாக்லேட் பாக்கெட்டிலும் 40 சாக்லேட்டுகள் இருந்தன. இதன்படி அவரிடமிருந்த 6,400 கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை செய்தவர் கொல்கத்தாவைச் சேர்ந்த அகர்வால்(54) என்பது தெரிய வந்தது. அவர் ஜகத்கிரிகுட்டாவில் சில காலமாக மளிகைக்கடை நடத்தி வந்துள்ளார். இதன் பின் மோகன் என்ற வர்த்தகரிடம் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்து மளிகைக் கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. ஒவ்வொரு சாக்லேட் பாக்கெட்டையும் 1,000 ரூபாய்க்கு அவர் விற்றது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக எஸ்ஓடி அதிகாரிகள் கூறுகையில், “அகர்வாலிடமிருந்து 6,400 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பொடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா சாக்லேட் விற்பனையின் பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.