நேற்று முன்தினம்(21) நாடளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கான 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பிலும் இந்த நினைவேந்தலை ஒட்டித்தான நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், “உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி” எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் இரத்ததான நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்மேளனத்தின் தலைவர் சுஜீவாவின் தலைமையிலும், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், இளைஞர் சேவை அதிகாரி தயாசீலன் அவர்களின் வழிகாட்டுதலிலும் இவ் இரத்த தான முகாமானது தாண்டவன் பேடினன்ஸ் மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்குப் பிரதேச பிரதேச செயலாளர் வாசுதேவன், சிறப்பு அதிதியாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, மற்றும் கௌரவ அதிதிகளாக தாண்டவன்வெளி காணிக்கை அன்னை திருத்தளத்தின் பங்குத்தந்தை Rev. Fr. பிராசிஸ் ஜூலியன், முன்னாள் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி R. பிரபீன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி A. தயாசீலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் பல இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யும் உன்னத பணியில் ஈடுபட்திருந்தனர். இதன் போது இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
அதேசமயம் சான்றிதழ்களை ஏற்பாடு செய்த இருதயபுரம் கிழக்கு Youth In Action மற்றும் ஜெயந்திபுரம் முழுமதி இளைஞர் கழகத்திற்கும், மரக்கன்றுகளும் ஏற்பாடு செய்த நாவலடி இளைஞர் கழகத்திற்கும் மற்றும் இந் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சமமேளனம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.