மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தை பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Brian Udaigwe ஊடாக பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மின்னஞ்சல் மூலமாக இந்த பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆயரின் பதவி விலகல் கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜீவராஜ் தொடர்புகொள்ள முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
தொடர்ச்சியாக உடல் நிலை பாதிப்புக்குள்ளான ஆயர் அவர்கள் இதன் காரணமாக பதவி விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தே முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஆயராக இவர் திகழ்கின்றார்.
எனினும், அடுத்து வரப் போகும் ஆயர் எங்கிருந்து தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், ஆயரின் கோரிக்கை தாமதமின்றி ஏற்று கொள்ளப்பட்டு விரைவில் புதிய ஆயர் ஒருவர் நியமிக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவரையான காலப்பகுதியில், அருகில் உள்ள ஆயர் ஒருவரின் கீழ் பெறுப்புக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு மறை மாவட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக அண்மையக் காலத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆயர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை, அருட்தந்தையர்களும் சுமத்தியிருக்கின்றனர்.
இந்தநிலையிலேயே, ஆயரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.