டிரான் அலஸை உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தண்டனையில் இருந்து விடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சட்டவாட்சியை உதாசீனப்படுத்தும் வகையிலும் தொடர்ச்சியாக கருத்து வௌியிடுவதால் அமைச்சர் இனியும் அந்த பதவியில் தொடர்வதற்கு தகுதியற்றவர் என்பது தெரியவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல ஊடகங்களிலும் விரிவான கவனத்தை ஈர்த்திருந்த, கட்டுகுருந்த STF பயிற்சி முகாமில் இடம்பெற்ற பயிற்சியை நிறைவு செய்து வௌியேறும் அணிவகுப்பு நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வௌியிட்ட கருத்துகள் தொடர்பில், கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கலந்தாலோசித்துள்ளது.
அமைச்சரின் கூற்றை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அமைச்சரின் இந்த கூற்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் குற்றவியல் நீதி தீர்ப்புக் கட்டமைப்பை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என வலியுறுத்தியுள்ளது.
குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை விதிப்பது உள்ளிட்ட நீதியை நிலைநாட்டும் செயற்பாடு அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள நீதிமன்ற எல்லைக்குள் மத்திரமே இடம்பெறுகின்றது. அத்தகைய செயற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்ற பூரண விசாரணை மற்றும் நியாயமான வழக்கு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
அண்மைக் காலமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள், கைது செய்யப்பட்ட நிலையில் இடம்பெற்ற மரணங்கள், துன்புறுத்தல் சம்பவங்கள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை கவனத்தில்கொள்ளும்போது அமைச்சரின் இந்த கூற்றினூடாக நீதி, தண்டனை விதிப்பு, தண்டிக்கும் நீதிமன்றத்தின் விடயதானங்களுக்கு அப்பாற்பட்ட உரிய நடைமுறைக்கு இணங்காத தான்தோன்றித்தனமாக நிர்வகிக்கக்கூடிய செயற்பாடு என்ற அபாயகரமான நிலைப்பாடு ஏற்படுகின்றமை தௌிவாகின்றது.
மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்ற வகையில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் கட்டுப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தவறாக வழிநடத்தும் கூற்றுக்களை தொடர்ச்சியாக பிரசாரம் செய்வதன் ஊடாக மக்களின் நம்பிக்கை சீர்குலைவது மாத்திரமன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரும் தவறாக வழிநடத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சரின் கூற்று உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக வேண்டுகோள் விடுக்கின்றது. அமைச்சர் டிரான் அலஸ், தண்டனையில் இருந்து விடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சட்டவாட்சியை பொருட்படுத்தாமலும் மீண்டும் தெரிவிக்கும் கருத்துகளின் ஊடாக அவர் தொடர்ச்சியாக அந்தப் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என்பதை காண்பிப்பதால் அவரை உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அகற்றுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிமேதகு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.
மேலும், ஸ்தாபிக்கப்பட்ட சட்ட நடைமுறை வரையறைகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்படும் தண்டனை விதிப்பதற்கான அதிகாரம் முழுமையாக நீதிமன்றத்திடம் காணப்பட வேண்டும் என தூய்மையான கோட்பாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
இதனைத் தவிர எந்தவொரு பண்புள்ள நீதிக் கட்டமைப்பும் பின்பற்ற வேண்டிய சட்டம், சர்வதேச கோட்பாடுகளால் உறுதி செய்யப்பட்ட நீயாயமான, செயற்றிறன் மிக்க விசாரணைக்கு உட்படுவதற்கும் நியாயமான வழக்கு விசாரணையைபெற்றுக்கொள்வதற்கும் குற்றம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.