மட்டக்களப்பில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சாதாரண தரத்திற்கு கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்பு நடாத்தப்படுவதால் குறித்த மாணவர்கள் மறைக்கல்வி, அறநெறி பாடசாலைகளுக்கு செல்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் இதற்கு கட்டுப்பட்டாலும், தற்போது 05 அல்லது 10 பேர் கொண்ட மாணவர்களை சில ஆசிரியர்கள் ஒன்றாக இணைத்து தமது வீடுகளிலே தனியார் வகுப்புக்களை நடத்துகின்றார்கள் இதனால் சில பெற்றோர்கள் மறைக்கல்வி, அறநெறி பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை என சுட்டிக்காட்டினார்.
இதற்கு தங்களுடைய கருத்துக்களையும் வழங்கிய சாணக்கியன் மற்றும் ஜனா எம்.பி ஆகியோர், பதிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களுக்கு நாம் இந்த உத்தரவை வழங்கினாலும், வீடுகளில் நடைபெறும் தனியார் வகுப்புகளை தடுப்பதற்கு எம்மால் உத்தரவு வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பதிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களுக்கு உத்தரவு வழங்க முடியும் என்றால், வீடுகளில் நடைபெறும் வகுப்புகளை நிறுத்துவதற்கும் எம்மால் உத்தரவு வழங்க முடியும் என்றார்.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரை அனைத்து பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிலையங்களையும் சென்று பார்க்கும் படியும், பின் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் மேலும் கலந்தாலோசிக்கப்பட்டது.