மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) 32வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வும் மாணவர் பராமரிப்பு திட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்வுகள் சங்கத் தலைவர் N. ஜோதிராஜா தலைமையில் சங்கத்தின் சிவநேசராசா மண்டபத்தில் நேற்று காலை மு.ப 9.30 மணிக்கு நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட கல்விப் பணிப்பாளரும், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திரு. S.S. மனோகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.
சங்கத்தில் 20 வருடங்களுக்கு மேலாக கற்பித்தல் பணியில் ஈடுபடும் K. குணரெத்தினம், திருமதி R. ரஞ்சிதமலர், S. புனிதசுந்தரம், V. பேரின்பராஜா ஆகியோர் மாணவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு அதிதியாக சங்கத்தின் ஸ்தாபக தலைவர் S. தேவசிங்கன் கலந்துகொண்டார். இவர் தமது உரையில் சங்கத்தின் தோற்றம் தொடர்பாகவும் இக்காலக்கட்டத்தில் தாம் எதிர்நோக்கிய சவால்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். சங்கத்தின் பராமரிப்பில் உள்ள மாணவர்கள் தாம் கற்கும் பாடசாலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தமது வருத்தத்தை தெரிவித்தார்.
மேலும் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய இப்பிரதேச இரு பெரும் பாடசாலைகள் மாவட்டக் கல்விப் பணிப்பாளரால் பெற்ற அனுகூலங்களையும் சபைக்கு ஞாபகமூட்டினார்.
இறுதியாக பிரதம அதிதியைக் கௌரவிக்கம் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதம அதிதி தனது உரையில் “EDS பராமரிப்புத் திட்டத்தை சங்கத்தின் ஸ்தாபகர் ஆரம்பிக்கும் போது அவருக்கு சில சிக்கல்கள் இருந்தது இதனால் ஆண் மாணவர்களை அருகிலுள்ள ஆண் பாடசாலை விடுதியிலும் பெண்களை தமது வீட்டிலும் தங்கியிருக்க வழிசெய்தார். இதன் காரணமாக விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் பெண்கள் விடுதியை ஆரம்பிக்க வழியேற்பட்டது.
இதே நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வள நிலையமொன்றை ஆரமப்பிக்கும் தேவை ஏற்பட்டது. இதை கள்ளியங்காட்டிலுள்ள சாகிரா கல்லூரியில் அமைக்குமாறு எனக்கு பணிக்கப்பட்டது. இருப்பினும் அதைக் கல்லடி உப்போடையிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் அமைக்க திட்டமிட்டேன். இப்பிரதேசத்தில் சிலர் விவேகானந்தா மகளீர் வித்தியாலயத்தை மூடுவதற்காக நான் திட்டமிடுவதாக என்னைக் குற்றம் சாட்டினர். இன்று இதன் பலாபலன்களை இச்சமூகம் அனுபவிக்கின்றது.
பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தை மட்டக்களப்பிற்குக் கொண்டுவர காரணமான இப்பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் வரகுணம் என்பதை பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதேபோல் மட்டக்களப்பு தேசிய கல்லூரியை இங்கு கொண்டுவர யார் காரணமானவர் என்பது பலருக்குத் தெரியாது. காலங்கள் மாறும்போது வரலாறுகள் திரிபுபடுத்தப்படுகின்றது. எனவே வரலாறுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.