நாகையில் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் 13 ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குகிறது. இன்ட்ஸ்ரீ தனியாா் கப்பல் நிறுவனம் கப்பல் சேவையை வழங்குகிறது.
கப்பல் காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை சென்றடையும். இதனை கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் நிரஞ்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் நிரஞ்சன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
“ கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்பில் ஒரு நபருக்கு 5000 ரூபாயும், பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு 7500 ரூபாயும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை
கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லலாம் எனவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்து செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் sailindsri.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பல்வேறு தேதிகளில் பயணிக்க சுமார் 126 பயணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் வருகின்ற 10 ஆம் தேதி நாகை துறைமுகத்திற்கு வர உள்ளது. சோதனை ஓட்டம் முடிவடைந்த பிறகு போக்குவரத்து தொடங்கும்” என நிரஞ்சன் தெரிவித்தார்.