மட்டக்களப்பு தலைமையப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காரிலிருந்து ஒரு தொகை போதை மாத்திரைகள் கைற்றப்பப்பட்டுள்ளதுடன், அதனை கொண்டு சென்ற ஒருவரும் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையின் புலனாய்வுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு புகையிரத வீதியில் வைத்து மோட்டார் கார் ஒன்றை சோதனையிட்டபோது இந்த போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்திரவின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகர் குணசிறிதிலகவின் ஆலோசனைக்கு அமைவாக விசேட அதிரடிப்படையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசத்திற்கான பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் சம்பத்குமாரவின் வழிகாட்டலில் கல்லடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலையிலான குழுவினர் இந்த முற்றுகையினை முன்னெடுத்தனர்.
இதன்போது ஓட்டமாவடி பகுதியிலிருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 48 பெட்டிகள் கொண்ட 1440 போதை மாத்திரைகள் மட்டு ரயில்வே வீதியில் வைத்து மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர்,கார்,போதை மாத்திரைகள் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.