இலங்கையில் இடம்பெற்ற யுத்ததின் போதும், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் போதும் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைத் தூபி ஒன்றை அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள், முப்படையினர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகளை நினைவு கூரும் வகையில் இந்தத் துாபி அமைக்கப்படவுள்ளது.
இதன் ஊடாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் நினைவு கூரும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
இலங்கை சுதந்திரத்தின் பின்னர் குடியியல் குழப்பங்கள், அரசியல் அமைதியின்மைகள், இன மோதல்கள் மற்றும் நீண்டகால யுத்தம் ஆகியவற்றிற்கு முகங்கொடுத்தமையினால் அனைத்து இன, மத, தொழில் மற்றும் ஏனைய தனித்துவங்களைக் கொண்ட மக்கள் அதனால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் மோதல்களினால் மகளின் நல்வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன் நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக அமைந்திருந்தன.
இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டத்தின் மூலம் நினைவேந்துகை மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் கூட்டாக இழப்புக்களை வழங்குவது அழுத்தங்களுக்கு உள்ளாகிய நபர்களின் சமூகங்களுக்கும் குழுக்களுக்கும் ஏதுவான வகையிலான உரிமை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூரும் வகையில் நினைவுத் துாபி அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாக கொழும்பு நகரில் பொருத்தமான இடமொன்றில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்காக சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.