T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் தேர்வு தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (13) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பின் போது ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அகில தனன்ஜய ஆகிய அனுபவ சுழல் பந்துவீச்சாளர்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வியாஸ்காந்த் இணைக்கப்பட்டமைக்கான காரணம் வினவப்பட்ட போது தேர்வுக்குழு உறுப்பினர்களான டில்ருவான் பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தங்களுடைய பதிலை தெரிவித்தனர்.
“வியாஸ்காந்தை எடுத்துக்கொண்டால் அவர் அணியிலிருக்கும் ஏனைய சுழல் பந்துவீச்சாளர்களை விட உயரமானவர். அவர் பந்துவீசும் பாணியும் மேலும் உயரத்தை கொடுக்கிறது.
எனவே மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆடுகளங்களில் வியாஸ்காந்தின் வேகம் சிறந்த சாதகத்தை கொடுக்கும் என நம்புகிறோம்”. என டில்ருவான் பெரேரா குறிப்பிட்டார்.
இதேவேளை அஜந்த மெண்டிஸ், அகில தனஞ்சய மற்றும் ஜெப்ரி வெண்டர்சேயை வைத்து பார்க்கும் போது வியாஸ்காந்த் கடந்த காலங்களில் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.அதுமாத்திரமின்றி வீரர் ஒருவர் சரியான கட்டத்தில் இருக்கையில் அதிலிருந்து பயனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சர்வதேச போட்டிகளில் வியாஸ்காந்த் அதிகமாக விளையாடவில்லை.எனினும் ரி20 லீக் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகின்றார்.
எந்தவொரு சவாலையும் அவரால் எதிர்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். எனவேதான் வியாஸ்காந்தை தேர்வுசெய்ய தீர்மானித்தோம்” என்றார்.
அதேசமயம் 2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை தொடரானது, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.