அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்றுள்ளது.
இதற்காக அவருக்கு 150,000 டொலர்கள் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவு விடுதியில் வசிப்பிடத்தையும் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 ஆசிரியர்களுக்கும் 12,500 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. 1980ஆம் ஆண்டு பிறந்த வி. வி. சுகி கணேசநந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார்.
அத்துடன் இவர் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆவார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறையை எதிர்கொள்ள போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சுகி கணேசநந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் தி வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.