கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக இலங்கை ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில்,
குறித்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக அவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .
இதன்போது தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .
இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரிகளை திட்டிய அமைச்சர் , அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
பின்னர் , அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளனர்.இதனையடுத்து உரிய கட்டணத்தை ஊழியர் கேட்ட போது , ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என கூறப்படும் அதேசமயம், அரசியல்வாதி விமான நிலையத்தில் கடும் தொனியில் நடந்து கொண்டமை குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.