முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் செயலை நாம் ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “பல்கலைக் கழக மாணர்கள் நினைவேந்தலுக்காக வைத்திருந்த பூக்கள் மற்றும் கஞ்சிப்பானை அடுப்பு அனைத்தையும் பொலிஸார் காலால் தட்டிவிட்டு அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
நாட்டிலே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது என சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த சட்ட ஒழுங்கை மீறி அதனை ஒரு வன்முறையாகப் பயன்படுத்துவது பொலிஸாராகவே இருக்கின்றார்கள்.
நினைவேந்தல் செய்வதற்குத் தடை இல்லை என சொல்லப்படுகின்றது, நினைவேந்தல்களை தங்களது சமயத்தினதும், கலாசாரத்தினதும், முறைமையின்படி மலர்தூவி எவ்வண்ணமாக சமயக் கடமைகள் இருக்கின்றதோ அவ்வண்ணமாகவே இந்நிகழ்வுகளைச் செய்யலாம் என சொல்லப்படுகின்றது.
நாட்டிலே 15 வருடங்களுக்கு முன்னதாக எமது மக்கள் தங்களது பசியைத் தீர்ப்பதற்கு இரத்தக் கறைகளோடு கஞ்சியை ஆகாரமாக அருந்தி தமது பசியைப் போக்கியிருந்துள்ளனர். அந்த நினைவை நாங்கள் மக்களுக்குள்ளேயே எடுத்துச் சென்று நினைவு கூருகின்ற வேளையிலே ஸ்ரீலங்கா அரசு பேரினவாத அரசாக செயற்படுகின்றது.
இந்த நாளிலே பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடைபெற்ற சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மாறாக இது பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடைபெற்ற சம்பவம் இல்லை எமது தமிழினத்திற்கு நடைபெற்ற ஓர் சம்பவமாகும்.
எனவே நாம் ஒரு சிவில் சமூகமாக இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்காலத்திலே பொலிஸாருக்கு சட்ட நடவடிக்கைகளும், ஒழுக்காற்று நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு, இவ்வாறான அராஜகம் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
சர்வதேசமும், மனித உரிமை ஆணைக்குழுவும் இதில் தலையீடு செய்ய வேண்டும்” எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் குறிப்பிட்டள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தைய ஜெகதாஸ். சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.