உக்ரைன் தரப்பிலிருந்து ஜேர்மனிக்கு கோரிக்கை ஒன்று வந்துள்ளதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தொடர்ந்து பல நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வருகிறது. தற்போது, வான்வழியில் ஏவக்கூடிய ஆயுதமான டாரஸ் குரூஸ் ஏவுகணைகளை தங்களுக்கு வழங்குமாறு உக்ரைன் ஜேர்மனியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுடைய கோரிக்கையை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி ரஷ்யா உக்ரைன் யுத்தத்தில் முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் கோரியுள்ள ஏவுகணைகள் 500 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடியவை. அதாவது, உக்ரைனிலிருந்து இந்த ஏவுகணைகளை ஏவினால், அவை ரஷ்யாவுக்குள்ளேயே சென்று தாக்க முடியும்.
ஆனால், அமெரிக்கா உட்பட, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும், தாங்கள் உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ரஷ்யாவுக்குள் சென்று தாக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளன.
இவ்வாறு, ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடக்கும் பட்சத்தில், போர் இன்னும் பெரிதாகிவிடும் என குறித்த நாடுகள் எண்ணுகின்றன.
ஆகவே, உக்ரைன் கேட்டுள்ள ஏவுகணைகளை ஜேர்மனி வழங்குமா என்ற கேள்வி தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.