வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் குற்றம் சுமத்துவதாக இலங்கையில் உள்ள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த ஊடகம் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவும் நிலையில் தகுதியான அதிகாரிகள் இருந்தும் நியமிக்காத நிலை காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வட மாகாண அமைச்சுக்களான கல்வி, சுகாதாரம், மகளிர், விவகாரம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியன தொடர்ந்தும் பதில் செயலாளர்கள் கடமையில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் அண்மையில் நிர்வாக சேவை சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற அன்ரன் எழிலரசி ,அருள் நாதன் ஆகியோர் வடக்கு மாகாண சபைக்கு உள்ளீர்க்கப்படட போதிலும் அவர்களுக்குரிய பதவி நிலைகள் வழங்கப்படவில்லை.
அது மட்டுமல்லாது கடந்த ஏழு மாதங்களாக வடக்கு மாகாண சபைக்கு உள்ளீர்க்கப்பட்ட நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரியான ஆழ்வார் பிள்ளை சிறீக்கு அமைச்சு ஒன்றின் செயலாளர் பதவி வழங்காமல் தொடர்ந்தும் மாகாண சபையில் உள்ளார்.
வடக்கு மாகாண சபை அமைச்சுக்களில் சுகாதார அமைச்சு அத்தியாவசிய துறையாக உள்ள நிலையில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக உள்ள ஜெகுவுக்கு பதில் கடமை செயலாளராக சுகாதார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள மூன்று செயலாளர்கள் உரிய தரத்தினை பூர்த்தி செய்யாத அதிகாரிகளாக காணப்படும் நிலையிலும் விவசாய அமைச்சின் செயலாளர் ஜெகுவுக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சையும் வழங்கியமை அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் உரிய தரத்தினை பூர்த்தி செய்த அதிகாரிகளை அமைச்சுக்கு நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.