இலங்கையின் அதிகாரப்பூர்வ கடன் குழுவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் அரசாங்கம் விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் அடுத்த மீளாய்வுக்கு முன்னதாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் பாரிய கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பரிஸ் கிளப்பின் அதிகாரப்பூர்வ கடன் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1039.png)
இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை சாதகமான முறையில் அமைந்துள்ளதாகவும் அரசாங்க அதிகாரியொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
எனினும், தனியார் கடன் வழங்குனர்கள் மற்றும் பிணைமுறி உரிமையாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ளதாக குறித்த அரசாங்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.