குருநாகல் பிரதேசத்தில் கவனக்குறைவாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் காயமடைந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 15 வயதான தருஷ தனஞ்சய நிருஷன் ரத்நாயக்க மற்றும் அவரது சகோதரரான ஜனிந்து சாமோத் ரத்நாயக்க என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
அனுஷா குமாரி என்ற 45 வயதான தாயார் பலத்த காயமடைந்து குருநாகல் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த (27) ஆம் திகதி குருநாகல்-கொழும்பு வீதியின் குருநாகல் மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்னால் நான்கு வழி சந்திப்பில் அதிகாலை 4.50 மணியளவில் விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் ஓட்டுநர், குருநாகல் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிழலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
55 வயதான தனியார் பேருந்தின் சாரதியான ஜயதிலக பண்டார என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில், பேருந்து அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும் இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை வெளிநாட்டில் உள்ளார் எனவும் விபத்து குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.