மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து மெக்சிகோவின் வடக்கில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.
வீசிய பலத்த காற்று காரணமாக மேடை சரிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இடிபாடுகளில் படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேடை சரிந்து விழுந்ததற்கு பலத்த காற்று காரணமென உள்ளூர் அதிகாரிகள் கூறினாலும், பாதுகாப்பு நெறிமுறைகளில் அல்லது கட்டுமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதை கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மெக்சிகோவில் வரும் ஜூன் 2 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.