தமிழகத்தையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கும் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த திருகோணமலையை சேர்ந்த பாடசாலை மாணவன் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை ஸாஹிராக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான பஃமி ஹசன் சலாமா எதிர்வரும் யூன் 15 ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார்.
குறித்த மாணவன் கடந்த மூன்று மாதங்களாக இவ் சாதனை முயற்ச்சிக்கான தீவிர பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தியாவின் தனுஸ்கோடி, அரிச்சல்முனையில் இருந்து தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை 8 மணித்தியாலத்தில் தாம் கடக்க எண்ணியுள்ளதாக நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பஃமி ஹசன் சலாமா தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையிலிருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்தி கடந்துள்ளார்.
இவருக்கான நீச்சல் பயிற்ச்சிகளை விமானப்படை கோப்பிறல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார்.
இவ் பயிற்றுநர் 2021 ம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணிநேரம்,19 நிமிடம்,58 செக்கனில் நீச்சலை நிறைவு செய்து, ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணிநேர சாதனையை முறியடித்த சாதனையாளர் ஆவார்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த திருகோணமலையைச் சேரந்த ஹரிகரன் தன்வந்தையையும் இவரே பயிற்றுவித்திருந்தார்.