கிழக்கு மாகாணத்தில் இன்று வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் கல்முனை மேல் நீதிமன்றத்தினால் நேற்று (27) வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதுவரை நியமனம் எதுவும் வழங்க கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் மேற்கொண்ட அயராத முயற்சியினால் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தெரிவில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனத் தெரிவித்த கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை, இதனை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் மகஜர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் நிலவும் A/L பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி நடாத்தப்பட்டிருந்தது.
இப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக குறித்த நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில், இதன் மூலம் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இன்று முதல் இவர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், இத்தெரிவில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், இதனால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலையடைந்துள்ளனர்.
குறித்த நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடாமல் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் மாத்திரமே வெளியிடபட்டிருக்கிறது. இவ்வாறு நியமனம் வழங்கும் முறையானது சட்டத்திற்கு முரணானது என்று கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவையின் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் இவ்விவகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தமையுடன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த நேர்முகப் பரீட்சையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் குளறுபடிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இவற்றை நிவர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட பட்டதாரிகளையும் ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் மற்றும் அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் -இவ்விடயத்தை ஒட்டி கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் சார்பில் அதன் செயலாளர் ஆ.மன்சூர் நேற்று “அனைத்துப் பரீட்சார்த்திகளுக்குமான அறிவித்தல்” என்ற பெயரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் – கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்குறித்த போட்டிப் பரீட்சையின் தரவு உள்ளீடு செய்யும் கணினி அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக அந்த போட்டிப் பரீட்சை சம்பந்தமான மேல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை பரீட்சார்த்திகள் அனைவருக்கும் தயவுடன் அறியத்தருகிறேன் என்றும், இந்த கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இறுதித் தேர்வு பட்டியல் மற்றும் மொத்த புள்ளிகள் பட்டியல் கிழக்கு மாகாண இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தயவுடன் அறியத்தருகிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் காணப்படுவதாலும், ஆசிரியர் நியமனம் புள்ளிகளில் தவறுகள், மோசடி உள்ளமையை மாகாண நிருவாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதுவரை நியமனம் எதுவும் வழங்க கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்திற்கு கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஜூன் 5 வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று (28) வழங்கப்படவிருந்த நியமனம் மறு அறிவித்தல் வரை இடைக்கால தடை உத்தரவின் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாகாண நீதிமன்றத்தினால் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான ஹஸ்ஸான் றுஷ்தி, அம்ஜாட் அகமட், ஆதம் லெப்பை ஆஸாத், சாதீர் முஹமட் , குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் றாஸி முஹம்மத் ஆகியோரினால் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் கருதி பொதுநலத்துடன் இரவு பகலாக குறித்த வழக்கு தயார் செய்யப்பட்ட மன்றில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸியின் நியமனத்தில் நடந்தேறிய முறையீனங்கள் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு விளங்கப்படுத்தப்பட்டது.